கணவன்-மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் மேற்கு வீதியில் விவசாயியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தாங்கள் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் சுந்தரம் கூறியதாவது, கடந்த 2008-ஆம் ஆண்டு வாணிபுதூர் பகுதியை சேர்ந்த 3 பேரிடம் எனக்கு சொந்தமான 1 1/2 ஏக்கர் நிலத்தை அடகு வைத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன்.
கடந்த 2019-ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வரை வட்டி செலுத்தியுள்ளேன். அந்த நபர்கள் அடமானம் வைத்த நில பத்திரத்தை வைத்து வேறு ஒருவருக்கு நிலத்தை விற்றுள்ளனர். இன்று வரை அந்த நிலத்தில் தான் நான் விவசாயம் செய்து வருகிறேன் இதுகுறித்து கேட்டபோது 25 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் நிலத்தை தருவோம் என அவர்கள் மிரட்டுகின்றனர். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.