கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை மனைவி சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
பிரிட்டனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் Deve என்னும் முதியவர் அங்குள்ள தோட்டத்தில் வீல் சேரில் செவிலியரின் உதவியுடன் அமர்ந்திருக்க, அவருடைய மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு தன்னுடைய கணவருடன் பேசும் காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ஒவ்வொருவரும் தங்களையும், தங்களின் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார செயலாளர் ஒருவர் உரையாற்றியுள்ளார்.
அப்போது, தன் தாத்தா கொரோனாவால் உயிரிழந்தது பற்றி கூறும் போது கண்களில் வந்த கண்ணீரை தவிர்க்க தடுமாறியதை நாடே பார்த்துள்ளது. இப்படி சொந்தங்களையும், அன்பானவர்களையும் கூட சந்திக்க முடியாத நிலையில் அவர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்து மகிழ்கிறது இந்த கொடூரமான கொரோனா. இதற்கிடையில் மேலை நாட்டவர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் பண்டிகை கிறிஸ்துமஸ் ஆகும்.
தற்போது பண்டிகை நெருங்கும் மகிழ்ச்சியான நிலையிலும் கூட சொந்தங்களையும், அன்பானவர்களையும் சந்திக்க முடியாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முதியோர் இல்லத்தில் தங்கி இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கலாம். கைகளைப் பிடித்து ஒரு முறையாவது கட்டியணைத்து கொள்ளலாம். கொரோனா பரிசோதனை செய்து இல்லை என்று தெரிந்தவுடன் முதியோர் இல்லத்தில் உள்ள தங்களுடைய கணவர் அல்லது உறவினரை கவச உடையுடன் சந்திக்கலாம் என்று அறிவித்துள்ளது.