விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார் . கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர் சந்தோஷ் கருவை கலைக்க கூறி வலியுறுத்தியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.
அப்போது திடீரென காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து சுரேகாவை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது சுரேகா சந்தோஷிடம் பறித்துக்கொண்டு கணவர் சந்தோஷின் கழுத்து, மார்பு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.