சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த பெண் பூ வியாபாரியை தொழிலாளி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரோமன் மிஷன் தெருவில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலையின் கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதில் மணிமேகலை திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் ஆட்சியர் வீடு அருகே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திருமணமான கூலித்தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருடன் மணிமேகலைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் மணிமேகலையை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மணிமேகலை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரவிச்சந்திரன் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த மணிமேகலை மீதும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டார். இதனால் அலறி துடித்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.