திண்டுக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அலை மோதியது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். மேலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடைகள் அனைத்தும் மூடப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதனை முன்னிட்டு மெயின் ரோடு, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு, மேற்குரதவீதி, கடை வீதி ஆகிய பகுதிகளில் அரிசி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இது தவிர நாகல்நகர் சந்தை, காந்தி மார்க்கெட், அரசமரத்தெரு, தினசரி காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலை மோதி நின்றது. மேலும் பெரும்பாலான மக்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரத்திற்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.