ரஜினியை கட்டாயப்படுத்தி நடிக்க அனுப்பி வைத்ததாக அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விழாவில் பேசிய ரஜினி, ‘நான் நடத்துனராக இருந்தபோது என் நண்பர் ராஜ்பகதூர் தான் எனக்குள் இருக்கும் நடிப்புத்திறனை அடையாளம் கண்டுகொண்டார். அவர் தான் நான் திரைத்துறையில் சேர ஊக்கம் கொடுத்தார்’ என தெரிவித்தார். தான் நடிக்க வந்ததற்கு காரணமே ராஜ்பகதூர் தான் என்று ரஜினி கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் அளித்துள்ள பேட்டியில், ‘ரஜினிக்கு ஆரம்பத்தில் நடிக்க விருப்பமே இல்லை. அவருக்கு விருப்பத்தை உருவாக்கி ஊக்கம் அளித்தேன். நாடகத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்து ஒரு நடிகனுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அவரிடம் இருந்ததை கண்டு பிடித்தேன். திரைப்படக் கல்லூரிக்கு போ, அங்கு வரும் பெரிய பெரிய இயக்குனர்கள் உன்னுடைய நடிப்பை பார்த்து சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள் என கூறி அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தேன். அங்குதான் இயக்குனர் பாலச்சந்தர் சார் ரஜினியை பார்த்து அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. விருது மேடையில் என் பெயரை உச்சரித்தது அவனுடைய நன்றியை காட்டுகிறது’ என கூறியுள்ளார்.