சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான வீரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் புலியகுளம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். கடந்த 13 -ஆம் தேதி பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு கோவிலில் வைத்து வீரகுமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுமி 10-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்ததும், கட்டாயப்படுத்தி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் வீரக்குமார் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் சிறுமியின் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.