வேலூரில் பொரித்த மீனை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக் கொடுத்ததால் அந்தக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், கஸ்பா பஜார் பகுதியில் அன்சர் சுரேயா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆஃப்ரீன், அசேன் என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சர், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பொரித்த மீன் துண்டுகளை குழந்தைகளுக்காக வாங்கி வந்துள்ளார்.
அதை சாப்பிட்ட 2 குழந்தைகளும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், அருகிலிருந்த மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுத்துள்ளார். அந்த மருந்தை குடித்த சிறிது நேரத்திலேயே 2 குழந்தைகளின் உடல் நலமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அந்த குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பொரித்த மீனை சாப்பிட்ட பிறகு குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உணவுப்பொருள் சாப்பிட்ட 6 மணி நேரத்திற்குள் வாந்தியும் அதன்பின் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அது கண்டிப்பாக ஃபுட் பாய்சன் என்கிறார்கள் மருத்துவர்கள். இதையடுத்து 2 குழந்தைகளின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணி ராஜன் பேசுகையில், உடற்கூறாய்வு பின்னர்தான் குழந்தைகளின் இழப்புக்காக உண்மையான காரணம் தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஃபுட் பாய்சன் பற்றி அவர் கூறுகையில், அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். இவ்வாறு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகையில் உடலில் பொட்டாசியம் அளவு குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதனால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் அவர்கள் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகவும். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.