Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் தொகுதி தென்னை மரங்கள், திராட்சை தோட்டங்கள், மாமரங்கள் ஆகியவற்றோடு வெங்காயம், தக்காளி அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கயிறு தயாரிப்பு மற்றும் மூங்கில் நாற்காலிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கடையநல்லூர் தொகுதியில் அதிகளவாக 6 அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் இருமுறை தொகுதியை வசபடுத்தியுள்ளனர்.

தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபூபக்கர் ஆவர். கடையநல்லூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,909 பேர். காமராஜர் ஆட்சியில் மஜித், அதிமுகவில் நாகூர்மீரான் என்றும் செந்தில் பாண்டியன் என மூன்று அமைச்சர்களை இந்த தொகுதியில் தந்த போதிலும் எந்த வளர்ச்சியும் இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். கடையநல்லூரில் பல ஏக்கரில் உருவாக்கப்பட்ட தொழிற்பேட்டை கவனிப்பாரின்றி கிடைக்கிறது. முறையான மருத்துவ வசதி இல்லை என்றும், குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

படுமோசமாக உள்ள சாலைகளால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். திராட்சைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி அதிக அளவில் விற்கப்படுவதால் அவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கோரிக்கையாகவே நீடிக்கிறது. அடவிநயினார், கருப்பாநதி, குண்டாறு அணை சுற்றுலா தளமாக்க வேண்டுமென மக்களும், தூர்வார வேண்டும் என விவசாயிகளும்  வலியுறுத்துகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி என்பதால் வடகரை, செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து சேதப்படுத்துவது நீண்ட காலமாக தொடரும் பிரச்சனையாக உள்ளது. இதனை தடுக்க மின்வேலி அமைக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். தென்னை நார் உற்பத்தி தொழில் நசிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது.

Categories

Tech |