Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டியோடு ஓய்வு…. “கைதட்டி மரியாதை செலுத்திய இங்கிலாந்து வீராங்கனைகள்”…. நெகிழ்ந்த ஜூலன் கோஸ்வாமி..!!

இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு இங்கிலாந்து வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில்  முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை வென்ற நிலையில், 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது..

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..

இந்த போட்டி இந்திய ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமிக்கு தனது கடைசி ஒருநாள் போட்டியாகும்.. இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியின் போது 7வது விக்கெட்டுக்கு பிறகு 40வது ஓவரில் ஜூலன் கோஸ்வாமி பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். அப்போது ஆச்சரியப்படத்தக்க வகையில், இங்கிலாந்து வீரர்கள் ஜூலனுக்கு கைதட்டி மரியாதை செலுத்தினர்..  ஜூலன் உள்ளே வரும் போது இங்கிலாந்தின் மாற்று வீரர்கள் கூட நடுவில் இருந்தனர். இங்கிலாந்து வீராங்கனைகளுடன் இணைந்து ஜூலனுக்கு தீப்தி சர்மாவும் கைதட்டினார். இதனால் அவர் நெகிழ்ந்து போனார்..

ஜூலன் பேட்டிங்கில் நீண்ட நேரம் இருக்கவில்லை.. முதல் பந்திலேயே அவர்ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் இப்போட்டியில் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.. இந்த ODI தொடர் தொடங்குவதற்கு முன்பே விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய்த ஜூலன், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டத்தை விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

புகழ்பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் 12 டெஸ்ட், 68 டி20 மற்றும் 203 ஒருநாள் போட்டிகளில் நாட்டிற்க்காக விளையாடியுள்ளார். டெஸ்டில் 44 விக்கெட்டுகளையும், மகளிர் ஒருநாள் போட்டியில் 253 விக்கெட்டுகளையும், மகளிர் டி20யில் 56 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் 2005 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், அதன் பின்னர், அவர் 5 உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.. அவர் 2005, 2009, 2013, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணிக்காக  ஆடியுள்ளார்..

Categories

Tech |