காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை பஜாருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் இருந்த டீக்கடையை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அக்பர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை உணவு பொருட்களை தின்றது. மேலும் முகமது குட்டி என்பவர் கடையையும் காட்டு யானை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
நேற்று காலை வழக்கம் போல கடைக்கு சென்ற உரிமையாளர்கள் காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கு வந்த வனத்துறையினரிடம் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.