டெல்லியில் போராட்டம் நடத்தும் பல்வேறு விவசாயிகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது கார்த்திக் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அரசின் வேளாண்மை மசோதா சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் டெல்லி எல்லையில், தேசிய நெடுஞ்சாலையிலேயே போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு அவர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை.
தற்போது நடிகர் கார்த்திக் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். “டெல்லி குளிரையும் பொருட்படுத்தாமல் வீதியில் கிடந்து போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்த்து அவர்கள் கோரிக்கையை பரிசீலித்து, அவர்கள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசு தாமதிக்காமல் இதை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்