பான்மசாலா விளம்பரத்திலிருந்து நடிகர் அமிதாப் பச்சன் விலகியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன் . இவர் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரப் படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். நகை கடை முதல் நூடுல்ஸ் வரை இவர் நடிக்காத விளம்பரங்களே இல்லை. மேலும் அமிதாப் பச்சன் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கும். அதன்படி தடைசெய்யப்பட்ட நூடுல்ஸ் கம்பனியின் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதன் பின் அவர் அந்த விளம்பரத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பான்மசாலா விளம்பரம் ஒன்றில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த பான்மசாலா அரசு அனுமதியுடன் தான் விற்கப்படுகிறது. சிகரெட் விற்பனைக்கு அரசு அனுமதி இருந்தாலும், அதை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் யாரும் நடிக்கமாட்டார்கள். அது போல்தான் பான் மசாலா விளம்பரமும். தற்போது பல சமூக நல அமைப்புகள் குறிப்பாக புகையிலை எதிர்ப்பு இயக்கங்கள் அமிதாப் பச்சனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அமிதாப் பச்சன் பான்மசாலா விளம்பரத்தில் இருந்து விலகியுள்ளார். மேலும் இவர் இந்த விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, இதற்காக வாங்கிய பெரும் தொகையையும் திருப்பி கொடுத்துள்ளார்.