இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் அருகே உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படி நாட்டுப்படகு ஒன்று நிற்பதாக மண்டபம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல்துறையினர் உடனடியாக மனோலிதீவுக்கு சென்றுள்ளனர்.
அப்போது கடலோர காவல்படையினர் வருவதை பார்த்த நாட்டுப்படகில் இருந்த சிலர் கடலில் குதித்து அங்கிருந்த தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து கடற்படையினர் நடுக்கடலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த நாட்டுப்படகில் சென்று பார்த்தபோது சுமார் 1,500 கிலோ கடல் அட்டைகள் 130 மூட்டைகளில் இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் மண்டபத்திற்கு கொண்டு சென்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதனைதொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்படி பறிமுதல் செய்த கடல் அட்டைகளை அழித்த வனத்துறையினர் நடுகடலில் தப்பியோடியவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினரும், வன காவல் படையினரும் இணைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் தேவிபட்டினத்தை சேர்ந்த முகமதுயாசர் அலி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையில் சுமார் 22 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கடல் குதிரைகளும் இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமதுயாசரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடல் அட்டைகள் அனைத்தும் பதபடுத்தபட்டு சில ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் என கூறியுள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.