கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப் புலியூரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவானது 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு திருமஞ்சனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை 5மணிக்கு திவ்யபிரபஞ்ச சேவை, 6 மணிக்கு காப்புகட்டுதல், பின் பெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் வந்தார்.
இதையடுத்து காலை 7 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஜூலை.6) திருப்பல்லக்கு, இரவு 7 மணிக்கு சூரிய பிரபை, நாளை திருப்பல்லக்கு-ராஜகோபாலன் சேவை, இரவு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். அதனை தொடர்ந்து தினசரி வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
வரும் 11ஆம் தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனமும், 12-ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம், வேடுபரி உற்சவமும் நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறும். 300 வருடங்களுக்கு பின் முதல் முறையாக தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அன்று 11 மணிக்கு பின் தீர்த்தவாரியும், 14 மற்றும் 15ஆம் தேதிகளில் திருமஞ்சனமும், திருக்கல்யாண உற்சவமும், 16-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார்சுபத்ரா, செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
==