கடற்கரையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்கு விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் அதிக அளவு கூட்டம் கூடும். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது. இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கும் படகில் சென்றனர். அங்கிருக்கும் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா போன்ற இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் மாலை நேரத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடலோர காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.