தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் இருந்து கடந்த 25 நாட்களில் ரூ.14.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமூக இடைவெளியே கடைபிடிக்காமல் இருந்ததாக ரூ.1.12 கோடி பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கடந்த 25 நாட்களில் முகக்கவசம் அணியாததால் மொத்தம் 7,28,755 பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் அபராதமாக ரூ.14 கோடியே 54 லட்சத்து 53 ஆயிரத்து 600 வசூலித்துள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது கடந்த 25 நாட்களில் 22,485 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டுள்ளது.