சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் ஜெகன் வீதியில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அஜித்குமார் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து அஜித் குமார் செல்போன் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வருமாறு தெரிவித்துள்ளார். அதன்பிறகு மாணவியை அஜித்குமார் தனது வீட்டிற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு அஜித் குமார் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று கட்டாய தாலி கட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜித்குமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.