பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் திமுக. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் சரியானதுதானா…?
பொங்கலை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், 2022-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளுக்கு துணிப் பையுடன் கூடிய வெறும் 21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் காணப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததையடுத்து, நானும் அந்தக் குளறுபடிகள எனது அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டினேன். ஆனால் அதற்கு முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்புவதாக கூறினார் .முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல் தவறான கருத்துகளை யாரும் பரப்பியதாகத் தெரியவில்லை. தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளைத்தான் மக்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளை சமைத்து சாப்பிட்டதில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட குறைகளில் துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஒப்புக் கொண்டுவிட்டது.
மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றை தமிழக அரசின் கவனத்திற்கு, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வரவேண்டிய கடமை பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. பொங்கல் தொகுப்பு குறித்த மக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.” எனக் கூறினார்.