அதிபர் புதினின் இந்த உத்தரவுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு தனது படைகளை நுழைவதற்கு ரஷ்யா உத்தரவிட்டதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிபர் புதினின் இந்த உத்தரவுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது “ரஷ்யா உக்ரேனில் இருந்து நிபந்தனையின்றி வெளியேறவும் தனது அண்டை நாடுகளை அச்சுறுத்துவது உடனடியாக நிறுத்தவும் வேண்டும். இந்நிலையில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த மாதிரியான நடத்தையை கண்டிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றிணைவது முக்கியம், வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அவர்களுடன் இணைந்து இருப்போம் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறியதாவது, “உக்ரேனின் இறையாண்மையை மதிக்க வேண்டும். மேலும் சர்வதேச சமூகத்தின் விருப்பத்திற்கு எதிரான இந்தியாவின் அரசியல், ராணுவத்தின் மோதல், பொருளாதாரங்கள் மற்றும் முழு உலகிலும் பெரும் மாற்றங்களை கொண்டு வரும்” என்று அவர் கூறினார்.
இதனையடுத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியதாவது “ரஷ்யா உக்ரேன் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியுள்ளது. அதிபர் புதினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம். சாத்தியமான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவுக்கு பதிலடி தரப்படும்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து வெளியூர் மந்திரி நனாயா மகுதா கூறியதாவது “அதிபர் புதின் உக்ரைனின் பிரிவினைவாத பிராந்தியங்களை அங்கீகரிக்க எந்த அடிப்படையும் இல்லை. இது உக்ரைன் மீது படையெடுப்பதற்காக ஒரு சாக்கு போக்கிற்கு உருவாக்கபட்ட தெளிவான திட்டமிட்ட செயலாகும். இதனால் அமைதியான தீர்வை காண அவசர தூதரக முயற்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்” என்று கூறினார்.
துருக்கி வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு கூறியதாவது “ரஷ்யாவின் இந்த முடிவை எங்களால் ஏற்க முடியாது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.