நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சிறந்த செய்தி இருக்கிறது. இந்தியாவின் பென்ஷன் ரெகுலேட்டரான பிஎப்ஆர்டிஏ, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த்திட்டம் (MARS) என்ற புது திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இந்த புது திட்டத்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் கோடிக் கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்சம் உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிஎப்ஆர்டிஏ தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யாய் கூறியதாவது, குறைந்தபட்ச ஓய்வூதியத்திட்டத்துக்கு தற்போது நாங்கள் தயாராகி வருகிறோம். பிஎப்ஆர்டிஏ தன் முதலீட்டாளர்கள் மீது பணவீக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கத்தை புரிந்துகொண்டு அதனடிப்படையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்று கூறினார். இப்போது என்.பி.எஸ்-ல் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் பெரும் தொகையை பெறக்கூடும். என்பிஎஸ்-ன் கீழ் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச உத்தரவாதத் திட்டத்தை துவங்கக்கூடும் என பந்தோபாத்யாய் கூறினார்.
சென்ற 13 வருடங்களில் தேசிய ஓய்வூதியத்திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 10.27 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருமானத்தை அளித்துள்ளது என சுப்ரதிம் பந்தோபாத்யாய் தெரிவித்தார். அதிகரித்துவரும் பணவீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்க, என்பிஎஸ் முதலீட்டாளர்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதை உறுதிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஓய்வூதிய சொத்துக்களின் அளவு ரூபாய்.35 லட்சம் கோடி என பிஎப்ஆர்டிஏ தலைவர் கூறினார். இவற்றில் 22 % அதாவது மொத்தம் ரூபாய்.7.72 லட்சம் கோடி என்பிஎஸ் மற்றும் 40 % ஈபிஎப்ஓ இடம் இருக்கிறது. இந்த திட்டத்தில் சேருவதற்கு அதிகபட்சம் வயது வரம்பு 70ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இப்போது மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது 3.41 லட்சத்திலிருந்து 9.76 லட்சமாக அதிகரித்து உள்ளது. மத்திய அரசு 2004 ஜனவரி 1 அன்று தன் ஊழியர்களுக்கு என்பிஎஸ் கட்டாயமாக்கியது. அதன்பிறகு அனைத்து மாநிலங்களும் தங்களது ஊழியர்களுக்கு என்பிஎஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. 2009ல் இத்திட்டம் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் திறக்கப்பட்டது. ஓய்வுக்குப் பின் ஊழியர்கள் என்பிஎஸ்- ன் ஒருபகுதியை திரும்பப் பெறலாம். வழக்கமான வருமானத்துக்காக மீதம் உள்ள தொகையில் இருந்து ஆன்யுட்டி எடுத்துக்கொள்ளலாம். 18 -70 வயது வரையுள்ள அனைவரும் இதில் முதலீடு செய்யலாம்.