முதியவரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் வண்ணார்பாளையத்தில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை தேடி வீரபாண்டியன் முழு விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒருவர் செல்போன் மூலம் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தனது பெயர் லாரன்ஸ் பிராங்க் எனவும், நியூசிலாந்தில் இருந்து பேசுவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் மாதம் 7 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அந்த நபர் உறுதி அளித்தார்.
இதனை அடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு 53 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி அவர் கூறிய வங்கி கணக்கில் வீரபாண்டியன் 53,000 பணத்தை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து மருத்துவ காப்பீடு, இன்சூரன்ஸ் என பல்வேறு காரணங்களை கூறி அந்த நபர் 15 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணத்தை வீரபாண்டியனிடமிருந்து வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரபாண்டியன் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.