ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய குற்றத்திற்காக சப்- இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்நகர் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் சகிலாவின் மீது மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாராயணசாமி தனது வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா நாராயணசாமியின் வீட்டிற்கு முன்பு கொட்டப்பட்டிருந்த மணலை அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் சசிகலா நாராயணசாமியையும், அவரது குடும்பத்தையும் தாக்கியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதற்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தன்மீது நாராயணசாமி முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என சசிகலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட் இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியாது என்பதை வலியுறுத்தி சப்- இன்ஸ்பெக்டர் சசிகலாவிற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.