ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து பல லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துகோட்டை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான நாகபூஷன்(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்படும் என இருந்தது. இதனால் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நாகபூஷன் பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர்கள் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றால் சில செலவுகள் இருக்கிறது. அதற்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி நாகபூஷன் மூன்று வங்கிகளின் கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக 14 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகபூஷன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.