தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்.4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் தேர்தலில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி சீட்டை கொண்டு வாக்களிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் 11 ஆவணங்கள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.
அதாவது ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்டத்தின் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி- அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் லைசன்ஸ், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.