உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என்று சுயேச்சை வேட்பாளர் கோஷமிட போது அதிமுக நிர்வாகிகளுடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாசியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் கோட்டாசியர் ராஜ்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்ற சுயேச்சை வேட்பாளர் தனசேகரன், தேர்தலில் அதிகப்படியாக பணபட்டுவாடா நடந்ததாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆவேசமாக பேசினார்.
இதனால் அதிமுகவினர் மற்றும் தனசேகரன் இடையே வாக்குவாதம் முற்றி கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். முன்னதாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கோட்டாசியர் ராஜ்குமார் வழங்கினார் .