சீனாவின் ஹூபெய் மாகாணம் நகரிலுள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு அத்துமீறி உள்ளார். இதனால் அந்த பெண் இளைஞரை தள்ளி விட்டார். மேலும் இதுபற்றி அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். அதனால் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த இளைஞரின் நண்பர்களும் ஓட்டலுக்கு உள்ளே வந்து அந்த இளம்பெண்ணை தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க முயற்சி செய்த இளம்பெண்ணின் தோழிகளையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் அவர்கள் அந்த இளம்பெண்ணை தரையில் தலை முடியை பிடித்து தரதரவென்று ஓட்டலுக்கு வெளியே இழுத்துச் சென்று அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கின்றன. ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மற்றொரு பெண் அதை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. இதற்கிடையே ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதனை தொடர்ந்து நாட்டில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றது. இதனால் இந்த விவகாரம் சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.