விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போல்நாயக்கன்வலசு கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு துரைக்கண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்டதால் முத்துசாமி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முத்துசாமி தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டு ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். நேற்று காலை தோட்டத்தில் வேலைக்கு சென்ற பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் முத்துசாமி இறந்து கிடந்ததை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துசாமியின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துசாமியை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.