கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி ஓசூர். குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக் கூடிய தொழில் நகரமாகவும் ஓசூர் உள்ளது. ஒரே நேர்கோட்டில் மலை மீது அமைந்துள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் கோவில்கள் புகழ் பெற்றவையாகும்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை இங்குதான் உள்ளது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர்.
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக காங்கிரஸ் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. சுதந்திரக் கட்சியும், சுயேச்சை வேட்பாளர்களும் தலா 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். திமுக, அதிமுக மற்றும் ஜனதா தளம் தலா 1 முறை வென்றுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் சத்யா. ஆண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட ஓசூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,49,224 ஆகும்.
தொழில் நகரமான ஓசூரில் கிராமப்புற சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக கூறும் மக்கள் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு. இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கை ஆகும்.
கர்நாடக எல்லை வரை இயக்கப்படும் பெங்களூரு மெட்ரோ ரயிலை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ரோஜா உள்ளிட்ட மலர்களையும், காய்கறிகளையும் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அதற்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஓசூர்-தளி ரயில் பாதையின் மீது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். கெலவரப்பள்ளி அணையில் சுற்றுலா தலமாக வேண்டும் என்பதும், மலை மீது அமைந்துள்ள சிவன், விஷ்ணு, பிரம்மா கோவில்களுக்குச் செல்ல ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்பதும் மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.