அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் அந்த மூதாட்டிக்கு பணம்கொடுத்து அ.தி.மு.க-வை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் என பேச்சு எழுந்தது. அதன்பின் பிருத்விராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிருத்விராஜ் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க-வின் கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். இதுகுறித்து எஸ்.பி. வேலுமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தமிழக அரசின் சாதாரண நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை பார்த்து அமைச்சர் க.பொன்முடி, ஓசி பஸ்ல போறீங்க என்று இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓசி பஸ் பயணம் என்று ஏளனம் செய்த அமைச்சரின் பேச்சை கண்டிப்பதை விடுத்து தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை வாபஸ் வாங்க வேண்டும். கண்ணியமிக்க காவல்துறையை சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.