மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் 40,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. அதில், அரசு மருத்துவமனைகளில் வெறும் 8,500 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன.
இது கொரோனா சிகிச்சையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், நிறுவனம் உள்ளூர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த 2 மாதத்தில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன. அதேபோல நொய்டாவில் உள்ள அக்வா ஹெல்த்கேர் நிறுவனம் 10 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய புதுமையான வென்டிலேட்டரை டிஆர்டிஓ உருவாகியுள்ளது. வென்டிலேட்டர் தவிர கொரோனா தாக்கியோருக்கு சிகிச்சை தரும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் முழு உடல் பாதுகாப்பு உடையையும் ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாகியுள்ளது. ஏற்கனவே, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் வென்டிலேட்டரை தயாரித்து கொடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.