கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே கோட்டூர்கோணம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பகோடு பாலம் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 23,000 பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இவரின் கடைக்கு அருகே பரமேஸ்வரன் என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த டீ கடையின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கடையில் இருந்த 3,500 ரூபாய் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து ஒரு காய்கறி கடை மற்றும் ஹோட்டலிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.