போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரசுரெட்டிபாளையம் கிராமத்தில் முருகன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி(40) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அவரது மனைவி வள்ளி, தம்பி ரமேஷ், அவரது மனைவி சாந்தி ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் நான்கு பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் முருகன் கூறியதாவது, எனக்கும் எனது தம்பிக்கும் 2 ஏக்கர் நிலம் பொதுவாக இருந்தது. அதனை எங்களது அண்ணன் சிவ சங்கரனின் மகன் ராம்கி என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.