இது விஷமத்தனமான கேள்வி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிக்கையாளரிடம் கோபம் கொண்டார்.
மதிமுகவில் பொறுப்பு பெற்ற வைகோ மகன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு கொடுத்த அதிகாரம் கழகத்தினுடைய சட்டதிட்ட விதிகளின்படி உள்ளது. நானே நியமனம் செய்து விடலாம்.
ஆனால் கழகத் தோழர்களுடைய எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 106 பேர் வாக்களித்தனர் அதில் 104 பேர் துரை வைகோ கட்சிப் பணிக்கு வர வேண்டும் என்று வாக்களித்தனர். இரண்டு பேர் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
ஆகவே ஜனநாயக முறைப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதில் எந்தவிதமான ஒளிவு, மறைவோ ரகசிய திட்டம் எதுவும் கிடையாது. என் மகன் என்பதற்காக கொண்டுவந்து திணிக்கவும் இல்லை. தொண்டர்கள் விரும்புகிறார்கள், அவர்கள் உருவாக்கிய கட்சி, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். மல்லை சத்யா மிகவும் நன்றாக இருக்கிறார்,என்னுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த குழப்பம் எல்லாம் ஊடகங்களில் வந்துள்ள பொய் செய்திகளை வைத்துதான். கட்சியில் அதிருப்தி கிடையாது, துளியளவும் கிடையாது, ஒரு சதவிகிதம் கூட கிடையாது. ஈஸ்வரன் விலகி இருக்கிறார் அதனால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது என தெரிவித்தார்.
மேலும், இப்போது புது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது உங்களுடைய பொறுப்புகள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்குறீர்கள் என வைகோ மகனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் ஒரு விஷ தன்மை வாய்ந்த நோக்கத்தோடு கேள்விகள் கேட்குறீர் என வைகோ தெரிவித்தார்.