Categories
மாநில செய்திகள்

ஒரு தந்தையாக எனது வேண்டுகோள்…. முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு….!!!!

யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக நான் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் என் அன்பான வணக்கம். சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என செய்திகள் ஒவ்வொன்றையும் கேள்விப்படும்போது உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக உள்ளது.

அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த காலகட்டத்தில், இப்படிப்பட்ட ஒரு கேவலமான அருவருப்பான செயல்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது தலைகுனிய வைக்கிறது. அவற்றை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. விட்டுறாதீங்கப்பா என்று அந்த குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், பொது வெளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

அதில் சில சம்பவங்கள் தான் வெளிவருகிறது. மற்றவை மறைக்கப்பட்டு விடுகிறது. எதற்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல. வாழ்ந்து காட்டுவதன் மூலமே அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும். தந்தையாக, சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்.. நான் இருக்கிறேன்… அரசாங்கம் இருக்கிறது… வணக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |