ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையல் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதனையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து சான்றிதழ் மற்றும் வாகன ஆவணங்களை சரிபார்த்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு சோதனைச்சாவடியில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சில வாகனங்கள் சோதனை சாவடிகளில் நிறுத்தாமல் செல்லும் நிலை தொடர்ந்து வருவதால் சோதனை சாவடியில் காவல்துறையினரின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார். எனவே சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.