இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அசாம் மாநிலத்தில் டிசம்பர் 26 ஆம் தேதியான இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும். ஆனால் டிசம்பர் 31ஆம் தேதி அன்று அது பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அனைத்து பணியிடங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், ஷோரூம் திறப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை 10:30 வரை திறக்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை பொறுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் மண்டபம், சினிமா அரங்குகள் மற்றும் ஆடிட்டோரியம் ஆகிய இடங்களில் 50% இருக்கை வசதியுடன், முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
மத தலங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 நபர் மட்டும் முழு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளை மீறும் நபர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51 முதல் 60 வரை விதிகளின்படி வழக்கு போடப்படும். மேலும் முக கவசம் அணியாதவர்கள் அல்லது பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.