தமிழகத்தில் இலவசமாக மொட்டை தான் கிடைத்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்..
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப். 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. மேலும் 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது..
இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை செய்தார்.. இந்த ஆலோசனையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 11 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்..
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது.. வாக்குப்பதிவு நேரம் எந்த சூழ்நிலையிலும் காலை 7 மணியிலிருந்து 6 மணிக்குள் இருக்கணும். அதுக்கு மேல இருக்க கூடாது. 7 to 7 இருக்கக்கூடாது..
கிராம பஞ்சாயத்துகளில் தேர்தல் சூழ்நிலையில் பல கட்டத்தில் வன்முறைகள், பல விரும்பத்தகாத சம்பவங்கள் அந்த 1 மணி நேரத்தில் நடைபெறும் வாய்ப்புகள் இருக்கிறது.. எல்லா கட்சிகளும் 7 மணி முதல் 6 மணி வரை தான் நடத்தணும்னு சொல்லிருக்காங்க.. வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும்..
3 அடுக்கு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி ஒரு சுதந்திரமான தேர்தலை நடக்க வேண்டும்.. எங்களுடைய ஆட்சி காலத்தில் நாங்கள் முழுமையாக 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தினோம். குறித்த காலத்தில் அப்போது திமுக என்ன சொன்னாங்க.. இந்த ஆட்சி பயந்து தேர்தலை தள்ளிவைக்காங்க.. அப்டின்னு சொன்னாங்க.. அதைத்தான் நானும் கேட்கிறேன்.. இப்ப பயந்துட்டு தான் தள்ராங்களா ஆட்சியில..
இப்போ வாக்களித்த மக்களை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வீசிக்கிட்டு 1000 ரூபாய் மகளிருக்கு கொடுக்கல.. முதியோருக்கு உதவித்தொகை 1000ல் இருந்து 1,500 கொடுக்கன்னு சொன்னாங்க.. அத கொடுக்கல..பெட்ரோலுக்கு 5 ரூபாய் குறைக்கிறேன்னு சொல்லிட்டு 3 ரூபாய் குறைச்சாங்க.. டீசலுக்கு 4 ரூ குறைக்கல..
கல்வி கடன் ரத்து, அப்புறம் நகை கடன் ரத்து, இப்படி எண்ணற்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒன்றுமே செய்யாமல், இன்று தமிழகத்தில் இலவசமாக கிடைப்பது ஒன்றே ஒன்றுதான்.. மொட்டை அடித்துக் கொள்ளலாம்.. அதுதான் இப்போ தமிழ்நாட்டு மக்கள் இலவசமாக மொட்டை அடித்துக் கொள்வதற்கு வழிமுறை எடுத்திருக்கிறார்கள்..
நா சட்ட கல்லூரியில் படிக்கும்போது அன்புக்குரிய சோ ராமசாமி அவர்களை சந்தித்து பேசினேன்.. அப்ப நான் அவரிடம் விமர்சித்து கேட்டேன்.. ஏன் சார் நீங்க மொட்டை அடித்துக்கொண்டு இருக்கீங்கன்னு.. அவர் சொன்னாரு மற்றவங்க என்ன மொட்டை அடிக்காம இருக்கதுக்கு.. நானே என்ன மொட்டை அடிச்சு கிட்டன்னு சொன்னாரு.. அதே மாதிரி தான் தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக மொட்டை அடிக்க பட்ருக்காங்க.. மொட்டை தான் இலவசமாக தமிழ்நாட்டில் கிடைக்கும் ஒன்று.. தமிழக மக்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது என்று விமர்சித்தார்..
முன்னதாக சட்ட பேரவையில் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது என்று திமுக அறிவிதிருந்தது.. அந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..