பெங்களூருவில் வைத்து ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை கைப்பற்றலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் இந்தியாவிலிருந்து 370 வீரர்கள், அயல்நாடுகளில் இருந்து 220 வீரர்கள் என மொத்தம் 590 பேர் தங்களுடைய பெயரை இணைத்துள்ளனர். இதில் 47 வீரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஐ.பி.எல் தொடரில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழக வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற பிறகு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் விளையாடி அசத்தியுள்ளனர். கடந்தஆண்டுகளை விட இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ஏராளமான தமிழக வீரர்கள் தங்களது பெயர்களை இணைத்தது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், ஹரி நிஷாந்த், தங்கராசு, நடராஜன், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முருகன் அஸ்வின், ஷாருக்கான், சித்தார்த், ஜெகதீசன், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ், விஜய்சங்கர், சந்திப் வாரியர், இந்திரஜித், சாய் சுதர்சன், அருண் கார்த்திக், பெரியசாமி அலெக்சாண்டர், பாபா அபராஜித், சிலம்பரசன், முரளிவிஜய், சோனு யாதவ், விவேக் ராஜ், கிரண் குமார், அதிசயராஜ் டேவிட்சன், பி.கவுதம், நித்திஷ் ராஜகோபால், எம்.முகமது, கௌஷிக் ஆகிய 29 வீரர்கள் தமிழகம் சார்பாக இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றனர்.