வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணத்தை பிரதமர் மோடி கொடுத்தார் என்று கூறி இளைஞர் ஒருவர் இஷ்டத்திற்கு செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலின் பொழுது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போட உள்ளதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ 5.5 லட்சத்தை பிரதமர் மோடி முதற்கட்டமாக தனக்கு போட்டுள்ளார் என்று நினைத்து அதனை திருப்பி தர மாட்டேன் என்று அடம் பிடித்து வருகிறார்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக வங்கி ஊழியர்கள் 5.5 லட்சத்தை அனுப்பியுள்ளனர். வங்கி கணக்கில் பணம் வந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த இளைஞன் அதனை செலவு செய்து விட்டதாக தெரிகின்றது. பணத்தை தவறுதலாக மற்றொருவரின் கணக்கில் வரவு வைத்து விட்டோம் என்று வங்கி ஊழியர்கள் அந்தக் கணக்கை சோதித்து பார்த்தபோது அதில் இருந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் அந்த வங்கி கணக்கின் உரிமையாளர் ரஞ்சித் தாஸ் என்பவரை தொடர்பு கொண்டு இது குறித்து தெளிவாக கூறியுள்ளார்.
ஆனால் பிரதமர் மோடி அனைத்து மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவதாக வாக்குறுதியளித்தார். அதன் முதல் தவணையாக 5.5 லட்சம் என்னுடைய வங்கி கணக்கில் அவர் செலுத்தியுள்ளார், அந்த பணத்தை செலவு செய்து விட்டேன், திருப்பித் தரமாட்டேன் என்று கூறியதை கேட்டு வங்கி ஊழியர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். எவ்வளவு கூறியும் அந்த நபர் பணத்தைத் தர மறுத்ததால் சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பெயரில் ரஞ்சிதை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் சுத்தமாக பணம் இல்லை, அதை நான் செலவு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.