ஐபிஎல்லில் புதிதாக 2 அணிகளை ஏலத்தில் எடுக்க முயன்ற அதானி குழுமம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஏமாற்றம் அடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 12,715 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு அணிகள் ஏற்கனவே உள்ளன இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதில் அகமதாபாத், லக்னோ, ராஜி, தர்மசாலா உள்ளிட்ட 6 நகரங்களின் அணிகள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல கோடிகளை கொட்டி ஐ.பி.எல் அணிக்கான உரிமையை பெற 22 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. இந்த நிலையில் துபாயில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அகமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதில் லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா, தலைமையிலான RPSG குழுமம் 7,090 கோடி ரூபாய்க்கும், அகமதாபாத் அணியை லக்சம்பர்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிவிசி கேப்பிட்டல்ஸ் குழுமம் 5,625 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர். 2 அணிகளையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதானி குழுமம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் நிறுவனங்கள் 5,000கோடி ரூபாய்க்கும் கீழாகவே ஏலம் கேட்டதால் வாய்ப்பு கை நழுவி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடும் போட்டி நிலவியதால் 2 அணிகளும் 20,000 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என்ற பிசிசிஐ- யின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விட்டது.