இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பிரபல பாடகி பி.சுசீலா உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் ’99 சாங்ஸ்’. கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியானது . விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்த இந்த படத்தில் எஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர் . தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ‘நேற்று மிகச்சிறந்த தென்னிந்திய பாடகி பி.சுசீலா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நான் தயாரித்த 99 சாங்ஸ் படத்தை பார்த்துவிட்டீர்களா ? ஓடிடியில் வந்துவிட்டது பாருங்கள் என கூறினேன். பின்னர் படத்தை பார்த்துவிட்டு மீண்டும் என்னை அழைத்த பி.சுசீலா படம் மிகவும் நன்றாக இருக்கிறது. இதேபோன்று என்னுடைய கதை உருவாக்கப்பட வேண்டும் அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என கேட்டார். ஏழு தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமைகளில் ஒருவர் என்னுடைய படத்தை பாராட்டுவது அருமையான விஷயம்’ என்று கூறியுள்ளார்.