தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாள் கடந்த அக்டோபர் 2 தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச்சலைக்கு மாவட்ட கலெக்டரான செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவர் வ.உ.சி சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் கடையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார்.
இதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த போது கூறியதாவது “கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம். இதற்கு கீழ் தான் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கதர் அங்காடி இயங்கி வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தினுடைய கடந்த ஆண்டு கதர் விற்பனை ரூபாய் 82 லட்சம் ஆகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தினுடைய கதர் விற்பனை ரூபாய் 9250000 என இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு சார்ந்த பகுதிகளில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் வருகிற 2 ஆம் தேதி முதல் தீபாவளி வரை செயல்பட இருக்கின்றது.
இந்த விற்பனையில் தரமான கதர் ஜவுளிகள், தேன், குளியல் சோப்பு, பூஜை பொருள்கள், சாம்பிராணி, பனை பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரசு அலுவலர்களுக்கு மாதத்தவணையில் கதர் ரகங்களை வாங்கி பயன்பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் அரசு ஊழியர்களும் இணைந்து இந்த தொழிலை வளம் பெறச் செய்து நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரங்களை சிறக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.