கேரளாவில், வீடு இல்லாத ஏழை எளிய மாணவிகளுக்கு, இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறார்கள். இந்த சமூகப் பணிக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு வீடு கட்ட தொடங்கி, இன்று வரை அந்த பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது.தற்போது வரை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். வீடு கட்டிக் கொடுக்கும் பணிக்காக இந்த ஆசிரியர்கள் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டுகின்றனர்.
இதனைப்பற்றி அந்த ஆசிரியர்களில் ஒருவரான லிஸ்சி கூறும்போது, மாணவிகளுக்கு சொந்த நிலம் இருந்தும் சரியான வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டுவதற்கு ஹவுஸ் சேலஞ்ச் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தை ஆரம்பித்த பின்பு பலதரப்பட்ட குடும்பங்களுக்கு நிலம் இல்லை என்பதையும் தெரிந்துகொண்டோம். அதனால் அவர்களுக்கு நிலத்தையும் தானம் செய்யுமாறு மக்களிடம் கேட்டுள்ளோம். ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரங்களை ஊக்குவிப்பதன் மூலமாக வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.