சாலையோரம் போடப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பூங்கா முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம். தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் கடைகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை மூலம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர். இந்நிலையில் பூங்கா முன்பு இருக்கும் சாலையோர கடைகளால் ஏலம் எடுக்கும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கு சென்று சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையாததால் அதிகாரிகள் கடைகளை அகற்றி லாரியில் ஏற்றியுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது பூங்கா பகுதியில் இருக்கும் கடைகளுக்கு வருகிற 29-ஆம் தேதி மறு ஏலம் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஏலம் எடுக்கும் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.