தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் இருந்து 32 சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிதாக இன்னும் 3 நெடுஞ்சாலைகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது 6 சுங்கச்சாவடிகளை அமைக்கப் போவதாக கூறி வந்த தகவல் மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற தமிழகத்தில் நாளுக்கு நாள் கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தின் வளர்ச்சியை இப்புதிய சுங்கச்சாவடிகள் பாதிக்கும். எனவே இதை ஏற்க இயலாது.
தமிழகத்தில் அமைய உள்ள புதிய 6 சுங்கச்சாவடிகளிலும் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தேசிய அளவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 19.64 சதவீதம் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மட்டும் 96.43 சதவீதம் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்.
சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்வும், சுங்க கட்டணம் உயர்வதன் காரணமாகவும், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள். எனவே புதியதாக 6 சுங்கச்சாவடிகளை திறக்க இருக்கும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். மேலும் 38 சுங்கச்சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.