தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் வலம் வருகிறார். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்திற்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் விஷாலுக்கு பதிலாக கோபுரா ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தது. அப்போது லைகா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் விஷால் கடனை திருப்பி செலுத்தும் வரை விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் அனைத்து பட உரிமைகளையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் திடீரென லைகா நிறுவனம் நடிகர் விஷாலின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில் நடிகர் விஷால் எங்களுக்கு தர வேண்டிய கடனை திரும்ப செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். எனவே விஷாலின் வீரமே வாகை சூடும் படத்திற்கான தமிழ் உட்பட அனைத்து மொழி வெளியீடுகளுக்கான உரிமையை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி விஷால் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். அப்போது விஷாலிடம் நீதிபதி எதற்காக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு விஷால் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, விஷாலின் அனைத்து சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். மேலும் நடிகர் விஷால் செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.