வெளிநாட்டு பயணிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதல் முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி, சவுதி, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா, குவைத், ஓமன், கத்தார், போன்ற நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாது பயணிகள் ஏற்கனவே விமானம் ஏறும் முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த பரிசோதனை செய்வதற்காக தனியார் பரிசோதனை மையம் இரண்டு விதமாக கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இதனால் ரூ.1,200 கட்டணத்திற்கு பரிசோதனை செய்தால் அதன் முடிவு 6மணியிலிருந்து 8மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்றும் ரூ.1,500 பரிசோதனை செய்தால் 2 மணியில் இருந்து 4 மணி நேரத்துக்குள் முடிவு கிடைக்குமென தனியார் பரிசோதனை மையம் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்,சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா, விமான நிலைய அலுவலர்கள் மற்றும் காவலர்கள் வந்து இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் பணம் கட்டுவதற்கு ஏதுவாக பணப்பரிமாற்றம் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விமான நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.