தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும்மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதற்கு கண்டனத்தை தெரிவித்த தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பாக வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி ஆளுநரின் ராஜ்பவன் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்திருக்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்தியில் ஆட்சியில் இருந்த தைரியத்தால் ஆவணத்துடன் பேசும் அண்ணாமலைக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.