கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாரங்கபாணி பகுதியில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை.
எனவே உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை உறுப்பினர்களாக இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.